இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக செயல்பட ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட ராகுல் டிராவிட், பின்னர் பின் வாங்கியதற்கான அதிர்ச்சி காரணத்தை கங்குலி வெளியிட்டுள்ளார்.  

இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக செயல்பட ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட ராகுல் டிராவிட், பின்னர் பின் வாங்கியதற்கான அதிர்ச்சி காரணத்தை கங்குலி வெளியிட்டுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை 1-3 என இந்திய அணி இழந்தது. இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. விராட் கோலி, ரஹானே, புஜாராவை தவிர மற்றவர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததன் விளைவாக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரவி சாஸ்திரி பயிற்சியாளரான பிறகு, இந்தியாவிற்கு வெளியே இந்திய அணி சோபிக்கவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. தற்போது இங்கிலாந்திலும் தொடரை இழந்துள்ளது. 

போட்டிக்கு போட்டி அணியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. ரவி சாஸ்திரி மீது கங்குலி, சேவாக் போன்ற முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் பற்றி கண்டுகொள்ளாத ரவி சாஸ்திரி, தற்போதைய இந்திய அணிதான் சிறந்த அணி என்று மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லி வருகிறார்.

தற்போதைய இந்திய அணி சிறந்த அணி என்பதை வாயில் சொல்லாமல் செயலில் காட்டுமாறு சேவாக் காட்டமாக தெரிவித்தார். எனினும் ரவி சாஸ்திரி தான் சொன்னதையே சொல்லிவருகிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததற்கும் இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைந்ததற்கும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காரும் பொறுப்பேற்க வேண்டும் என கங்குலி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாகவும் ராகுல் டிராவிட் பேட்டிங் ஆலோசகராக ஒப்புக்கொண்டு பின்னர் விலகியது தொடர்பாகவும் கங்குலி மௌனம் கலைத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய கங்குலி, ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்கும்போது, வெளிநாடுகளுக்கான சுற்றுப்பயணங்களுக்கு ராகுல் டிராவிட் பேட்டிங் ஆலோசகராகவும் ஜாகீர் கான் பவுலிங் ஆலோசகராகவும் செயல்பட கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் இருந்த நான், சச்சின் மற்றும் லட்சுமணன் ஆகிய மூவரும் முடிவு செய்தோம்.

இதுதொடர்பாக ராகுல் டிராவிட்டிடம் பேசினோம். டிராவிட்டும் ஒப்புக்கொண்டார். பின்னர் இதுகுறித்து ரவி சாஸ்திரியிடம் பேசிய டிராவிட், பின்னர் பேட்டிங் ஆலோசகராக செயல்பட எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கி விலகினார். டிராவிட்டிடம் சாஸ்திரி என்ன சொன்னார்? டிராவிட் ஏன் விலகினார்? என்று என்னால் ஆணித்தரமாக அடித்து கூறமுடியவில்லை. அந்த சமயத்தில் பிசிசிஐ-யின் நிர்வாக குழுவும் பயிற்சியாளர் தேர்வில் குழப்பம் விளைவித்ததால் நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். பின்னர் அதிலிருந்து வெளிவந்தோம் என கங்குலி தெரிவித்துள்ளார்.

கங்குலி கூறியிருப்பதன் அடிப்படையில், ராகுல் டிராவிட் வெளிநாடுகளில் இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக செயல்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டது ரவி சாஸ்திரிதான் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.