இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளன.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர் தோல்வியை தழுவிவரும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணியை வீழ்த்தி தங்கள் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் உள்ளது. அதேபோல ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் சிதைந்து போய், தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவை வீழ்த்தி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் உள்ளது. 

இரு அணிகளுமே டெஸ்ட் தொடரை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. இதற்கிடையே அந்த தொடருக்கு தயாராகும் விதமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா லெவன் அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும் பிரித்வி ஷாவும் களமிறங்கினர். ராகுல் இந்த வாய்ப்பையும் தவறவிட்டு மீண்டும் சொதப்பினார். வெறும் 3 ரன்னில் வெளியேறினார். அவரை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே சிறப்பாக ஆடினர். பிரித்வி ஷா, புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 55 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா லெவன் அணியின் தொடக்க வீரர்கள் ஷார்ட் மற்றும் பிரியாண்ட் ஆகிய இருவரும் இணைந்து 24 ரன்கள் எடுத்துள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். வழக்கமாக முதல் ரன்னை அதிகமான பந்துகளை எடுத்துக்கொள்பவர் புஜாரா. நிதானமாக ஆடும் புஜாராவே இந்த போட்டியில் 89 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் அடித்தார். ஆனால் ரஹானே மிகவும் பொறுமையாக ஆடினார். 123 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்கள் அடித்த ரஹானே, ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். மற்ற அனைத்துமே சிங்கிள், இரண்டு ரன்கள் என சேர்க்கப்பட்டதுதான். ரஹானே ரிட்டயர் ஹர்ட் தான் ஆனாரே தவிர அவுட்டாகவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் பேட்டிங்கும் சரி, ரஹானேவின் ஆட்டமும் சரி மிரட்சியை ஏற்படுத்தும் வகையில்தான் இருந்தது.

ரஹானேவின் பொறுமையும் நிதான ஆட்டமும் அந்த அணிக்கு, அவரது விக்கெட்டை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்பதை உணர்த்தியிருக்கும்.