ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரஹானே முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதேநேரத்தில் கேப்டன் கோலி டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 25வது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் 8 ரன்களுக்கு உள்ளாகவே விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து போட்டியை கையிலெடுத்த புஜாரா மற்றும் கோலி ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். 

எனினும் இந்த ஜோடியை ஸ்டார்க் பிரித்துவிட்டார். புஜாராவை 24 ரன்களில் ஸ்டார்க் வெளியேற்ற, கோலியுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதலே அடித்து ஆடிய ரஹானே, பின்னார் நிதானமாக ஆடினார். கோலி அரைசதம் கடக்க, அவரை தொடர்ந்து ரஹானேவும் அரைசதம் அடித்தார். அத்துடன் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. கோலி 82 ரன்களுடனும் ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. 

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் முதல் ஓவரை ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் வீசினார். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரஹானே ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி தெளிவாக ஆடினார். எனினும் ஹேசில்வுட்டின் பந்தில் அவரும் ஆட்டமிழந்தார். 

சிறப்பாக ஆடிய கோலி, டெஸ்ட் அரங்கில் தனது 25வது சதத்தை பூர்த்தி செய்தார். இது கோலியின் 63வது சர்வதேச சதமாகும். 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும் 71 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில், 63 சதங்களுடன் மூன்றாமிடத்தை சங்கக்கராவுடன் பகிர்ந்துள்ளார் கோலி.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 127 இன்னிங்ஸ்களில் 25வது சதத்தை பூர்த்தி செய்த கோலி, விரைவில் 25 டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், கவாஸ்கரை பின்னுக்குத்தள்ளி டான் பிராட்மேனுக்கு அடுத்த இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். 

சதமடித்த கோலி, 123 ரன்களில் பாட் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ஷமி, நாதன் லயனின் பந்தில் கோல்டன் டக்காகி வெளியேறினார். அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்களை எடுத்துள்ளது.