மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் நேற்று செய்தியாளர்களிடம், "மெக்ஸிகன் ஓபனில் விளையாட இயலும் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும், நேற்று முன்தினம் பயிற்சியின்போது காலில் மிகுந்த வலி ஏற்பட்டது. இந்தப் போட்டிக்காக அனைத்து விதத்திலும் தயாராகியிருந்தேன்.

ஆனால், ஆஸ்திரேலிய ஓபனில் ஆடும்போது எந்த இடத்தில் வலி ஏற்பட்டதோ, அதே இடத்தில் தற்போது வலி மிகுந்துள்ளது.

காயத்தின் காரணத்தை கண்டறிந்து அதிலிருந்து முழுவதுமாக மீள்வதிலேயே தற்போது கவனம் செலுத்த விரும்புகிறேன். இரண்டு வாரங்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்கவுள்ளேன்" என்று அவர் கூறினார்.

நடால் தனது முதல் சுற்றில் சகநாட்டவரான ஃபெலிசியானோ லோபஸை சந்திக்க இருந்தார். நடால் ஒரு போட்டியிலிருந்து விலகுவது இது 6-வது முறையாகும்.