Pyongyang Winter Olympics Canada pair won first gold
பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஃபிகர் ஸ்கேட்டிங் பிரிவில் கனடா ஜோடி முதல் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது. இதே நாளில் கனடா தனது 2-வது தங்கத்தையும் வென்றது.
பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி-23-ல் பதக்கத்துக்கான போட்டிகள் யாவும் கடந்த சனிக்கிழமை தொடங்கின. இந்த நிலையில், 3-வது நாளான நேற்று பையத்லான், ஃபிகர் ஸ்கேட்டிங், ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங், ஸ்கை ஜம்பிங், ஸ்னோபோர்டு, ஸ்பீடு ஸ்கேட்டிங் ஆகிய 6 பிரிவுகளில் பதக்கப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஃபிகர் ஸ்கேட்டிங் போட்டியானது காங்னியூங் நகரில் உள்ள பனிச்சறுக்கு ஆட்ட மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கனடாவின் டெசா விர்சு - ஸ்காட் மொயர் இணை 118.10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை கைப்பற்றியது.
பனியில் சறுக்கியவாறு சுமார் நான்கரை நிமிடங்கள் நடனம் நிகழ்த்திய டெசா - ஸ்காட் இணைக்கு இது 3-வது ஒலிம்பிக் போட்டியாகும்.
இதே போட்டியில் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்ட ரஷியாவின் எகாடெரினா பாப்ரோவா - டிமிட்ரி சோலோவீவ் இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.
அமெரிக்காவின் மாயா ஷிபுடானி - அலெக்ஸ் ஷிபுடானி இணை வெண்கலப் பதக்கம் வென்றது.
மூன்றாவது நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஜெர்மனி 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
நெதர்லாந்து 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என அதே 7 பதக்கங்களுடன் 2-வது இடமும், நார்வே 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 3-வது இடமும் பிடித்துள்ளன.
