punjab defeats kolkata knight riders

கே.எல்.ராகுல், கெய்ல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அஸ்வின், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆட்டத்தை தொடங்கினர். சுனில் நரைன் ஒரு ரன்னுக்கே அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கி அதிரடியாக ஆடிய உத்தப்பா 34 ரன்களில் அவுட்டானார். நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் ஏமாற்றமளித்தனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் 43 ரன்கள் அடித்தார். இதையடுத்து அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.

192 ரன்கள் என்ற இலக்குடன் அதிரடி வீரர்கள் ராகுலும் கெய்லும் களமிறங்கினர். வழக்கம்போலவே ஆரம்பம் முதலே ராகுல் அடித்து ஆடினார். கெய்லும் அடித்து ஆட பஞ்சாப் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 8.2 ஓவரின்போது, பஞ்சாப் அணி 96 ரன்கள் குவித்திருந்தது. அப்போது மழை வந்ததால், போட்டி தடைபட்டது.

மழை முடிந்து மீண்டும் போட்டி தொடங்கியது. டக்வொர்த் முறைப்படி, 13 ஓவருக்கு 125 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, பஞ்சாப் அணிக்கு அடுத்த 28 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்டது. மீண்டும் அதிரடியைத் தொடர்ந்த ராகுல், அரைசதம் கடந்தார். 27 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அவுட்டானார். அரைசதம் கடந்த கெய்ல் 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 11.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.