இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 29-ஆவது லீக் ஆட்டத்தில் கோவா எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி அணியைத் தோற்கடித்து அசத்தியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வெற்றியின் மூலம் 7 புள்ளிகளை எட்டிய கோவா அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 7-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய புனே அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

புனேவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. கோவா அணியைப் பொறுத்தவரையில் அதன் ஸ்டிரைக்கர்கள் ரஃபேல் லூயிஸ், ஜோப்ரே ஆகியோர் அபாரமாக ஆடி கோல் வாய்ப்பை உருவாக்க போராடினர்.

32-ஆவது நிமிடத்தில் புனே வீரர் அகஸ்டின், கோவா வீரர் ஜோப்ரேவை பெனால்டி பாக்ஸ் அருகே கீழே தள்ள, கோவா அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பை வழங்கினார் நடுவர். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட லூயிஸ், பந்தை சுழற்றிவிட்டு மிக அற்புதமாக கோலடித்தார்.

இதையடுத்து ஸ்கோரை சமன் செய்ய கடுமையாகப் போராடியது புனே. முதல் பாதி ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் புனே அணிக்கு சில கோல் வாய்ப்புகள் கிடைத்தபோதும், அவை அனைத்தையும் கோவா கோல் கீப்பர் கட்டிமணி முறியடித்தார்.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் புனே வீரர்கள் கடுமையாகப் போராடியபோதும் பலன் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் கோவா அணிக்கு 60-ஆவது நிமிடத்தில் லூயிஸ் நல்ல கோல் வாய்ப்பை உருவாக்கினார். ஆனால் அதை ஜோப்ரே வெளியில் அடித்து வீணடித்தார். இறுதியில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.