இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில் எஃப்சி புனே சிட்டி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணி வெற்றி பெற்றது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடிப்பதற்கு இரு அணிகளுமே கடுமையாகப் போராடின. இருப்பினும், ஆட்டத்தின் 44-ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கான முதல் கோல் கிடைத்தது.

அந்த அணியின் டேவிட் சூச்சி பாஸ் செய்த பந்தை, தலையால் முட்டி கோலாக மாற்றினார் சக வீரர் ஜிஜி. இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் புனே அணி தனக்கான கோல் கணக்கை தொடங்க முற்பட்டபோதும், சென்னை அணி வீரர்கள் அதற்கான வாய்ப்பை அளிக்காமல் தடுப்பாட்டம் ஆடினர்.

புனே அணி அத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதால், சென்னை அணி தனது கோல் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டது. ஆட்டத்தின் 51-ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. அப்போது தன் வசம் கிடைத்த பந்தை சக வீரர் ரஃபேல் அகஸ்டோவுக்கு கடத்தினார் சென்னையின் மென்டி. அகஸ்டோ பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார் மற்றொரு சென்னை வீரர் டேவிட் சூச்சி.

ஆட்டத்தின் இறுதி வரையில் புனே அணி ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை. இதனால் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.