ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. வெளிநாடுகளில் தொடர்ந்து தோல்விகளை தழுவிவந்த இந்திய அணிக்கு, இந்த வரலாற்று வெற்றி புதிய அடையாளத்தையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. அந்த தோல்விகள் இந்திய அணியின் மீதும் கேப்டன் விராட் கோலி மீதும் கடுமையான விமர்சனங்கள் எழ காரணமாக அமைந்தன. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் புஜாராவின் பேட்டிங் மற்றும் பும்ராவின் பவுலிங் ஆகிய இரண்டும் தான் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசம். இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக ஆடிய புஜாரா, 3 சதங்களை விளாசினார். 521 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்று, தொடர் நாயகன் விருதையும் சிட்னி டெஸ்டின் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். 

டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, அந்த மகிழ்ச்சியுடன் இதுகுறித்து பேசிய புஜாரா, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதை மிகப்பெரிய விஷயமாக நினைக்கிறோம். எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்தோம். இந்த தொடரில் பேட்ஸ்மேன்களை காட்டிலும் பவுலர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. 4 பவுலர்களை வைத்துக்கொண்டு 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அதனால் எங்கள் பவுலர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். நான் அடிலெய்டில் அடித்த சதத்தை மறக்கமாட்டேன். அது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் என் கடமையைத்தான் செய்தேன். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஆடிய அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அந்த வகையில் நான் ஆடிய வரையில் எனக்கு தெரிந்து இதுதான் மிகச்சிறந்த இந்திய அணியாக கருதுகிறேன் என்று புஜாரா தெரிவித்தார். 

இதற்கு முன்னதாக இங்கிலாந்தில் சொதப்பியபோது, அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அப்போது அணிக்கு ஆதரவு அளித்து அவர்களை உத்வேகப்படுத்தும் விதமாக, தற்போதைய இந்திய அணிதான் உலகின் மிகச்சிறந்த டிராவலிங் அணி என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார். ஆனால் ரவி சாஸ்திரியின் கூற்று, கவாஸ்கர், கங்குலி உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்களின் எதிர்ப்பை சம்பாதித்தது. இந்நிலையில், அதேபோன்றதொரு கருத்தை புஜாரா கூறினாலும், பயன்படுத்திய வார்த்தைகளை மிகவும் கவனமாக பேசியுள்ளார். நான் ஆடிய அணிகளில் இதுதான் சிறந்த அணி என்பது எனது கருத்து என்று புஜாரா கூறியுள்ளார். பொதுவாக கூறாமல், தான் இடம்பெற்று ஆடியவரை, இந்த அணிதான் என்ற வார்த்தையை கவனமாக கூறியுள்ளார்.