பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் அரையிறுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ராணுவ அணிகள் வெற்றி பெற்றன.

கோவையில் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 53-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி ஆகஸ்ட் 27-ஆம் தேதி தொடங்கியது.

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 4-வது நாளான நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து பெங்களூரு விஜயா வங்கி அணி விளையாடியது.

இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 74-62 என்ற புள்ளிகள் கணக்கில் விஜயா வங்கி அணியை வீழ்த்தியது. 

மற்றொரு ஆட்டத்தில், பஞ்சாப் காவல் துறை அணியை எதிர்த்து புணே ராணுவ அணி விளையாடியது.

இதில், ராணுவ அணி 73-65 என்ற புள்ளிகள் கணக்கில் பஞ்சாப் காவல் துறை அணியை வீழ்த்தியது.

நாளை மாலையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஐ.ஓ.பி. - புணே ராணுவ அணிகள் விளையாடுகின்றன.