புரோ கபடி லீக் போட்டியின் பதினெட்டாவது ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியை 32-20 என்ற புள்ளிகள் கணக்கில் அரியாணா ஸ்டீலர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிக் கண்டது.

புரோ கபடி லீக் போட்டியின் பதினெட்டாவது ஆட்டம் நாகபுரியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் தலா 10 ரைடு புள்ளிகள் பெற்றன. அரியாணா அணி 16 டேக்கிள் புள்ளிகளும், குஜராத் அணி 9 டேக்களில் புள்ளிகளும் பெற்றன. அரியாணாவுக்கு இரண்டு 'ஆல் அவுட்' புள்ளிகள் கிடைத்தது.

இதில் தொடக்கம் முதலே அரியாணா அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அந்த அணியின் ரைடர் சுர்ஜித் சிங் தனது முதல் ரைடில் 2 புள்ளிகளை பெற்று அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தினார்.

குஜராத் தட்டுத்தடுமாறி புள்ளிகளை பெற்ற நிலையில், ஆட்டத்தின் முதல் பாதியிலேயே அந்த 13-9 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியது.

இந்நிலையில், 2-வது பாதியில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக குஜராத் வீரர் அபோஸார் மிகானிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்திலும் ஹரியாணா அசத்தலாக ஆட, இறுதியில் 32-20 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணா வெற்றி பெற்றது.

அரியாணா அணியில் அதிகபட்சமாக அதன் ரைடர் விகாஸ் கோன்ட்லா 6 புள்ளிகளும், தடுப்பாட்டக்காரர் மோகித் சில்லார் 7 புள்ளிகளும் பெற்றனர்.

குஜராத் வீரர் அதிகபட்சமாக சச்சின் ரைடில் 5 புள்ளிகளும், தடுப்பாட்டத்தில் 3 புள்ளிகளும் பெற்றார்.

மற்றொரு ஆட்டமான பெங்களூரு புல்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் மோதிய ஆட்டம் 21-21 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரைடு புள்ளிகளும், 7 டேக்கிள் புள்ளிகளும், 2 ஆல் அவுட் புள்ளிகளும் பெற்றன.

தெங்கு அணி 14 ரைடு புள்ளிகளும், 6 டேக்கிள் புள்ளிகளும் பெற்றன.

பெங்களூரு தரப்பில் ரோகித் குமார் அதிகபட்சமாக 5 ரைடு புள்ளிகள் பெற்றார். தடுப்பாட்டக்காரர் பிரீத்தம் சில்லார் 2 புள்ளிகள் பெற்றார்.

தெலுங்கு அணியில் கேப்டன் ராகுல் செளதரி 8 ரைடு புள்ளிகள் பெற, தடுப்பாட்டக்காரர் ராகேஷ் குமார் 2 புள்ளிகள் பெற்றார்.

இதன்மூலம் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் கண்ட தோல்வியிலிருந்து தெலுங்கு அணி மீண்டுள்ளது என்பது கொசுறு தகவல்.