புரோ கபடி லீக் சீசன் - 5 போட்டியின் 63-வது ஆட்டத்தில் டெல்லி தபங் அணி 38-30 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை தோற்கடித்தது.

புரோ கபடி லீக் சீசன் - 5 போட்டியின் 63-வது ஆட்டம் டெல்லி தபங் அணி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 18-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது பெங்களூரு. ஆனால், 2-வது பாதி ஆட்டத்தில் டெல்லியின் ஆட்டத்தை தாக்குபிடிக்க முடியாமல் பங்கமாக வீழ்ந்தது.

இந்த இரு அணிகளின் வீரர்களைப் பொருத்தவரையில், டெல்லி கேப்டன் மிராஜ் ஷேக் அதிகபட்சமாக 21 முறை ரைடு சென்று, 14 புள்ளிகளை கைப்பற்றினார்.

அந்த அணியின் பின்கள வீரர் சுனில் 2 டேக்கிள் புள்ளிகளைப் பெற்றார்.

பெங்களூரு தரப்பில் அதன் கேப்டன் ரோஹித் குமார் 21 முறை ரைடு சென்று, 13 புள்ளிகளை வென்றார்.

அதே அணியின் பின்கள வீரர் சுனில் ஜெய்பால் 3 டேக்கிள் புள்ளிகளை பெற்றார்.

டெல்லி அணி 26 ரைடு புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் பெற்றன.

பெங்களூரு அணி 22 ரைடு புள்ளிகள், 5 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 கூடுதல் புள்ளி பெற்றது.

இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி 4 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது.

அதேபோன்று 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு, 6 வெற்றி, 3 தோல்விகள், 3 ஆட்டங்களை சமன் செய்துள்ளது.