புரோ கபடி சீசன் – 5 போட்டியின் 21-வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பால்டான் அணியைத் தோற்கடித்தது.

புரோ கபடி சீசன் – 5 போட்டியின் 21-வது ஆட்டம் நாகபுரியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் முதல் நிமிடத்திலேயே ரைடின் மூலம் புள்ளிகளைப் பெற்றன. 3-வது நிமிடத்தில் புணேரி பால்டான் 3-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

அந்த அணியின் கிரிஸ் எர்னாக், சந்தீப் நர்வால் ஆகியோர் ஜெய்ப்பூர் வீரர்களை பிடிக்க, 6-3 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து கடுமையாகப் போராடிய ஜெய்ப்பூர் அணி 9-வது நிமிடத்தில் ஸ்கோரை 6-6 என்ற கணக்கில் சமன் செய்தது.

பிறகு புணேரி பால்டான் மீண்டும் முன்னிலைப் பெற, ஜெய்ப்பூர் அணி மீண்டும் ஸ்கோரை சமன் செய்தது.

ஜெய்ப்பூர் வீரர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தப்பன செல்வம் தனது அபார டேக்கிள் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். இதனால் முதல்பாதி ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 14-11 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே புணேரி பால்டான் அணியை ஆல் அவுட்டாக்கிய ஜெய்ப்பூர் அணி 17-11 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

ஜெய்ப்பூர் அணி தொடர்ந்து சிறப்பாக ஆடி 20-11 என்ற கணக்கில் முன்னிலைப் பெற, மறுபுறம் மோசமான நிலையில் இருந்து மீள போராடிய புணே அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இறுதியில் ஜெய்ப்பூர் அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக் கண்டது.

இந்த சீசனில் இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜெய்ப்பூர் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

அதேநேரத்தில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள புணேரி பால்டான் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.