புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசனில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான போட்டி டிராவில் முடிந்தது.
புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் பெங்களூரு புல்ஸ், புனேரி பல்தான், யு மும்பா, டபாங் டெல்லி ஆகிய அணிகள் மிகச்சிறப்பாக ஆடிவருகின்றன.
இன்று புனே ஷிவ்சத்ரபதி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் யு மும்பா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால் போட்டி கடுமையாக இருந்தது. கடைசியில் 40-37 என்ற கணக்கில் வெற்றி பெற்ற யு மும்பா அணி 31 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.
அடுத்த போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவி, பின்னர் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், டபாங் டெல்லி ஆகிய வலுவான அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி தொடர் வெற்றிகளை பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இன்று பெங்கால் வாரியர்ஸை எதிர்கொண்டது.
இந்த போட்டி தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் மாறி மாறி ஸ்கோர் செய்ய, ஆட்டம் சூடுபிடித்தது. கடைசி வரை இரு அணிகளுமே விட்டுக்கொடுக்கவில்லை. இதையடுத்து கடைசியில் இந்த போட்டி 41-41 என டிராவானது.
புரோ கபடி லீக் 9வது சீசனில் 35 புள்ளிகளுடன் பெங்களூரு புல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், 32 புள்ளிகளுடன் புனேரி பல்தான் 2ம் இடத்திலும், 31 புள்ளிகளுடன் யு மும்பா அணி 3ம் இடத்திலும், 29 புள்ளிகளுடன் டபாங் டெல்லி 4ம் இடத்திலும், 27 புள்ளிகளுடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 5ம் இடத்திலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 10ம் இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
