புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 59-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியை தோற்கடித்தது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 59-வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி, ஜெய்ப்பூரின் முதல் ரைடர் பவன் குமாரை வீழ்த்தி முதல் புள்ளியை பெற்றது. தொடர்ந்து அபாரமாக ஆடிய அந்த அணி 6-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பத்தாவது நிமிடத்தில் ரைடு சென்ற ஜெய்ப்பூர் கேப்டன் ஜஸ்வீர் சிங் ஒரு புள்ளியை பெற, அந்த அணி சரிவிலிருந்து மீண்டது. 18-வது நிமிடத்தில் ரைடு சென்ற ஜெய்ப்பூரின் அஜித் சிங், இரு புள்ளிகளை பெற்றார்.

ஸ்கோர் சமநிலையை 8-8 எட்ட ஜெய்ப்பூரின் பின்கள வீரர்கள் தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆட குஜராத் அணி 19-வது நிமிடத்தில் ஆல்-அவுட் ஆனது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் 14-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் ஜெய்ப்பூரின் பின்கள வீரர்கள் அபாரமாக ஆட, அந்த அணி 19-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 26-வது நிமிடத்தில் குஜராத் அணியில் இரண்டு வீரர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

எனினும் அசத்தலாக செயல்பட்ட அவர்கள், ஜெய்ப்பூர் ரைடர் பவன் குமாரை வீழ்த்தி சூப்பர் டேக்கிள் மூலம் இரு புள்ளிகளைப் பெற்றுத் தந்தனர். எனினும், தொடர்ந்து தடுமாறிய குஜராத் 33-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஆல் அவுட் ஆனது.

இதனால் ஜெய்ப்பூர் அணி 27-17 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. பிறகு குஜராத் கடுமையாக போராடியபோதும், வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது ஜெய்ப்பூர் அணி.

இந்த வெற்றியின்மூலம் இந்த சீசனில் எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜெய்ப்பூர் அணி, 5-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

வலுமிக்க அணியான குஜராத், கொல்கத்தா மண்ணில் தொடர்ந்து 2-வது தோல்வியை பெற்றுள்ளது.