புரோ கபடி சீசன் – 5 லீக் போட்டியின் 61-வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 47-21 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது பாட்னா பைரேட்ஸ் அணி.

புரோ கபடி சீசன் – 5 லீக் போட்டியின் 61-வது ஆட்டம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய பாட்னா அணி அதிரடியாக புள்ளிகளைச் சேகரித்தது.

ஜெய்ப்பூரின் தடுப்பாட்டத்தை தடுத்து பாட்னா கேப்டன் பிரதீப் நர்வால் புள்ளிகளை அள்ளிச் சென்றார்.

இந்த ஆட்டத்தில் பாட்னா அணி 30 ரைடு புள்ளிகளையும், 8 டேக்கிள் புள்ளிகளையும், 8 ஆல் அவுட் புள்ளிகளையும், ஒரு கூடுதல் புள்ளியையும் பெற்றது.

ஜெய்ப்பூர் அணி, 15 ரைடு புள்ளிகளையும், 5 டேக்கிள் புள்ளிகளையும், ஒரு கூடுதல் புள்ளியையும் பெற்றது.

பாட்னா தரப்பில் 22 ரெய்டுகள் சென்ற பிரதீப் நர்வால் 21 புள்ளிகளைப் பெற்றார். அந்த அணியின் பின்கள வீரர் சச்சின் 3 டேக்கிள் புள்ளிகளைப் பெற்றார்.

ஜெய்ப்பூர் அணியில் 16 முறை ரெய்டு சென்ற அஜித் சிங் 8 புள்ளிகளைப் பெற, பின்கள வீரர் சோம்வீர் 2 டேக்கிள் புள்ளிகளைப் பெற்றார்.

இறுதியில் 47-21 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தியது பாட்னா பைரேட்ஸ்.