Pro kabaddi Delhi faced with fate in Gujarat

புரோ கபடி சீசன் – 5 போட்டியின் 106-வது ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி 42-22 என்ற புள்ளிகள் கணக்கில் படுதோல்வி அடைந்தது தபாங் டெல்லி அணி.

புரோ கபடி சீசன் – 5 போட்டியின் 106-வது ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் குஜராத் அணி தொடக்கம் முதலே அசத்தலாக ஆட, மறுமுனையில் டெல்லி அணி திணறியது.

குஜராத் ரைடர் சந்திரன் ரஞ்சித் அட்டகாசமாக ஆட, அவரைப் பிடிக்க முடியாமல் டெல்லி பின்கள வீரர்கள் தடுமாறினர். தொடர்ந்து டெல்லி வீரர்களின் பிடியில் தப்பிய ரஞ்சித் புள்ளிகளைக் குவித்தார். இதனால் முதல் 7 நிமிடங்களில் 8-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது குஜராத்.

பின்னர் 8-வது நிமிடத்தில் டெல்லியை ஆல் ஔட்டாக்கியது குஜராத். இதன்மூலம் குஜராத் 12-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு சச்சினும், ரஞ்சித்தும் தொடர்ந்து புள்ளிகளைக் குவிக்க, 17-4 என்ற வலுவான முன்னிலையை எட்டியது குஜராத். அதேநேரத்தில் மறுமுனையில் டெல்லி அணி, 17-வது நிமிடத்தில் 2-வது முறையாக ஆட்டமிழக்க, குஜராத் 23-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

அடுத்த மூன்று நிமிடங்களில் மேலும் 4 புள்ளிகளைக் கைப்பற்றிய குஜராத், முதல் பாதி ஆட்டநேர முடிவில் 27-9 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் குஜராத் தொடர்ந்தது ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி ஆட்டத்தில் ரஞ்சித்தை தொட முடியாமல் திணறிய டெல்லி வீரர்கள், 22-வது நிமிடத்தில் அவரை முதல்முறையாக வீழ்த்தினர். 

சச்சினும், ரஞ்சித்தும் தங்கள் ரைடின் மூலம் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவிக்க, 28-வது நிமிடத்தில் குஜராத் 33-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அதேநேரத்தில் மறுமுனையில் போராடிய டெல்லி ரைடர் அபோல்பாஸில், அந்த அணியை ஏறக்குறைய மூன்று முறை ஆல் ஔட்டாவதிலிருந்து காப்பாற்றினார். எனினும் 31-வது நிமிடத்தில் மூன்றாவது முறையாக டெல்லி ஆட்டமிழந்ததால் குஜராத் அணி 38-15 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய குஜராத் அணி 42-22 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி கண்டது.

குஜராத் தரப்பில் சச்சின் 11 புள்ளிகளையும், ரஞ்சித் 9 புள்ளிகளையும் கைப்பற்றினர். அந்த அணியின் பின்கள வீரர் சுநீல்குமார் தனக்கு கிடைத்த 7 டேக்கிள் வாய்ப்புகளில் 6 புள்ளிகளைக் கைப்பற்றினார்.

டெல்லி தரப்பில் அபோல்பாஸில் 7 புள்ளிகளையும், ஸ்ரீராம் 6 புள்ளிகளையும் கைப்பற்றினர்.

இதுவரை 18 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணி 11-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

அதேநேரத்தில் டெல்லி அணி இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடி 14-வது தோல்வியை சந்தித்துள்ளது.