பிரித்வி ஷாவின் ஆட்டம் இளம் வயது கவாஸ்கர் மற்றும் சச்சினை நினைவுபடுத்தியதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் குர்ட்னி வால்ஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு திறமையான பல இளம் வீரர்கள் கிடைத்து கொண்டிருக்கின்றனர். ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, மயன்க் அகர்வால் என மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் கிடைத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நேற்று ராஜ்கோட்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆட பிரித்வி ஷா வாய்ப்பு பெற்றார். இதுதான் இந்திய அணிக்காக அவர் ஆடும் முதல் சர்வதேச போட்டி. 

அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். 134 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. களமிறங்கியது முதலே களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை பவுண்டரிகளுக்கு விரட்டிக்கொண்டே இருந்தார். குறிப்பாக பேக்ஃபூட் ஷாட்களை அபாரமாக ஆடினார். 

டெஸ்ட் கிரிக்கெட்டின் வழக்கமான பேட்டிங்கை ஆடாமல், ஒருநாள் போட்டி போல ஆடினார். இவரது ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் மெச்சினர். கிரிக்கெட் ரசிகர்களும் இவரது ஆட்டத்தை கொண்டாடினர். இவரது பேட்டிங் ஸ்டைல் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை ஒத்திருப்பதால், இந்திய அணியின் அடுத்த சச்சின் என அழைக்கப்படுகிறார். மேலும் இவரது நேற்றைய ஆட்டத்தை பார்த்து ரெய்னா உள்ளிட்ட சிலர் சேவாக்குடன் ஒப்பிட்டனர். 

சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் கலவை பிரித்வி ஷா என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் புகழாரம் சூட்டியிருந்தார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக்கின் கலவைதான் பிரித்வி ஷா என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழ்ந்திருந்தார். 

இந்நிலையில், பிரித்வி ஷா ஆடுவதை பார்க்கையில் இளம் வயதில் கவாஸ்கரையும் சச்சினையும் பார்த்தது போல் உள்ளது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின்ன் முன்னாள் ஜாம்பவான் பவுலர் குர்ட்னி வால்ஷ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வால்ஷ், பிரித்வி ஷா அபாரமாக ஆடினார். அவரது ஆட்டம் மிகவும் ஸ்பெஷலானது. பிரித்வி ஷாவின் ஆட்டம், இளம் வயது கவாஸ்கர் மற்றும் சச்சினை நினைவுபடுத்தியது. ஆட்டத்திறனில் மட்டுமல்லாமல் உயரம் மற்றும் உருவத்திலும் அவர்களை போலவே இருக்கிறார். பிரித்வி ஷா பயமில்லாமல் அவரது இயல்பான ஆட்டத்தையும் ஷாட்களையும் ஆடுகிறார் என வால்ஷ் புகழ்ந்துள்ளார்.

வால்ஷ் 1984ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடியவர். ஆம்புரூஷுடன் இணைந்து வேகப்பந்து வீச்சில் எதிரணியை மிரட்டியவர் வால்ஷ்.