வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்தியாவிற்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று காலை 9.20 மணிக்கு தொடங்கியது. 

இந்த போட்டியில் இளம் வீரர் பிரித்வி ஷா அறிமுகமாகியுள்ளார். ராகுலுடன் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்தது. கடந்த சில மாதங்களாக முதல்தர மற்றும் இந்தியா ஏ அணியில் சிறப்பாக ஆடிவரும் மயன்க் அகர்வால் தான் ராகுலுடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில் இளம் வீரர் பிரித்வி ஷாவும் மிகச்சிறந்த வீரர். எனவே இருவரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

இந்நிலையில், இந்த போட்டியில் பிரித்வி ஷா களமிறக்கப்பட்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் ஆடும் 293வது வீரர் பிரித்வி ஷா ஆவார். இந்த போட்டியில் மூன்று ஸ்பின்னர்கள், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஜடேஜா, அஷ்வின், குல்தீப் ஆகிய மூன்று ஸ்பின்னர்களும் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ராகுலும் பிரித்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ராகுல் எல்பிடபிள்யூ ஆனார். அம்பயர் அவுட் கொடுத்ததும், பிரித்வியுடன் ஆலோசித்துவிட்டு ரிவியூ கேட்டார் ராகுல். ரிவியூவில் அவுட் உறுதியானதால், ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரு ரிவியூவும் வீணானது. 

இதையடுத்து பிரித்வியுடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.