ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து காயத்தால் விலகிய பிரித்வி ஷா, சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரடியாக அரைசதம் அடித்து  ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அந்த தொடரில் அபாரமாக ஆடியதன்மூலம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் பயிற்சி போட்டியில் காயமடைந்ததை தொடர்ந்து அந்த தொடரிலிருந்து விலகி நாடு திரும்பினார். 

காயத்திலிருந்து குணமடைந்த பிரித்வி ஷா, ஐபிஎல்லுக்கு முன்னதாக சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணியில் ஆடிவருகிறார். காயத்திலிருந்து மீண்டுவந்த பிரித்வி ஷா, முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்தார் பிரித்வி. 

இந்நிலையில், கோவா அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்த பிரித்வி ஷா, மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். மும்பை - கோவா அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கோவா அணி, 20 ஓவர் முடிவில் 140 ரன்கள் எடுத்தது. 

141 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்களை சேர்த்ததால் மும்பை அணியின் வெற்றி எளிதானது. குறிப்பாக பிரித்வி ஷா அபாரமாக ஆடினார். 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்தார். 

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பிரித்வி ஷா, அபாரமாக ஆடி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது நல்ல விஷயம். பிரித்வி ஷாவின் அதிரடியால் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.