விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை, ஹைதராபாத், டெல்லி, ஜார்கண்ட் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

விஜய் ஹசாரே தொடர் கடந்த மாதம் 19ம் தேதியிலிருந்து நடந்துவருகிறது. 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு லீக் சுற்றில் ஆடின. இதில்  மும்பை, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, ஹைதராபாத், பீகார், ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின. 

காலிறுதியில் வெற்றி பெற்ற மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதியில் மும்பை அணி ஹைதராபாத்துடனும், டெல்லி அணி ஜார்க்கண்ட் அணியுடனும் மோதுகின்றன. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, ராயுடு தலைமையிலான ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. 

இந்த போட்டியில் மும்பை அணியில் ரோஹித் சர்மா, ரஹானே, பிரித்வி ஷா ஆகியோர் ஆடுகின்றனர். பீகாருக்கு எதிரான காலிறுதி போட்டியிலேயே மும்பை அணிக்காக அதிரடி வீரர் ரோஹித் சர்மா ஆடினார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், அதில் ஆடிய ரஹானே மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்காக ஆடுகின்றனர். 

ஏற்கனவே ரோஹித் சர்மா வானவேடிக்கை நிகழ்த்தக்கூடிய வீரர். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே சதமடித்து தனது திறமையின் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த பிரித்வி ஷாவும் ரோஹித் சர்மாவுடன் இணைவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் என மும்பை அணி வலுவாக உள்ளது. 

மும்பை அணி:

ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரஹானே, ஜெய் கோகுல் பிஸ்தா, சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லத், ஆதித்யா தரே, ஏக்நாத் கேர்கார், ஷிவம் துபே, ஆகாஷ் பர்கார், தவால் குல்கர்ன்னி, ஷாம்ஸ் முலானி, விஜய் கோஹில், துஷார் தேஷ்பண்டே, ராய்ஸ்டன் தியாஸ்