இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது ரஹானே-கோலி ஜோடி. ரஹானேவின் அந்த சிறப்பான பேட்டிங்கிற்கு ஒரு பிளேஷ்பேக் உள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியசத்தில் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. அதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. 

நாட்டிங்காமில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 82 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த ரஹானே, பொறுப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். கோலி-ரஹானே ஜோடி, நான்காவது விக்கெட்டுக்கு 159 ரன்களை சேர்த்தனர். களமிறங்கியது முதல் அபாரமாக ஆடிய ரஹானே 81 ரன்கள் குவித்து அவுட்டானார். முதல் இரண்டு போட்டிகளிலும் சரியாக ஆடாத ரஹானே, இந்த போட்டியில் சிறப்பாக ஆடினார். 

ரஹானே சிறப்பாக ஆடியதன் பின்னணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் ரஹானேவின் நலம்விரும்பி மற்றும் வழிகாட்டியுமான பிரவீன் ஆம்ரே கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள பிரவீன், ரஹானே சிறப்பாக ஆடியது குறித்து ஒரு சிறு கதையை கூற வேண்டும். கடந்த செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 14) எனது பிறந்தநாள். அன்றைய தினம் ரஹானேவிடம், நீ நன்றாக பேட்டிங் ஆடி ஓய்வறையை நோக்கி பேட்டை உயர்த்திக்காட்ட வேண்டும் என்ற எனது விருப்பத்தை கூறினேன். அதுதான் நீ எனக்கு கொடுக்கும் பிறந்தநாள் பரிசு என கூறினேன். 

நான் விரும்பியதுபோலவே ரஹானே சிறப்பாக ஆடி, அரைசதம் கடந்து ஓய்வறையை பேட்டை உயர்த்தியபோது பெரு மகிழ்ச்சி அடைந்தேன். அந்த மகிழ்ச்சியை என்னால் விளக்கிக்கூறவே முடியாது. அவ்வளவு மகிச்சியாக இருந்தது என பிரவீன் கூறினார்.