சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீர் எச்.எஸ்.பிரணாய் 17-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தரவரிசையில் அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளார் பிரணாய். அதன்படி எச்.எஸ்.பிரணாய் ஆறு இடங்கள் முன்னேறி 17-வது இடத்தைப் பிடித்துள்ளார்

தற்போதைய நிலையில் சர்வதேச தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் 4 இந்தியர்கள் உள்ளனர். அதில், ஸ்ரீகாந்த் 8-வது இடத்திலும், அஜய் ஜெயராம் 16-வது இடத்திலும், சாய் பிரணீத் 19-வது இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்க ஓபனில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய மற்றொரு இந்தியரான காஷ்யப் 12 இடங்கள் முன்னேறி 47-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் இந்தியரான சமீர் வர்மா, 4 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பி.வி.சிந்து 5-வது இடத்தில் உள்ளார். சாய்னா நெவால் ஓர் இடத்தை இழந்து 16-வது இடத்தில் உள்ளார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா - சிக்கி ரெட்டி இணை மூன்று இடங்களை இழந்து 20-வது இடத்தில் உள்ளது.