பெர்த்தில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து முன்னாள் கேப்டன் பாண்டிங் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் முற்றிலும் முரணான கருத்தை தெரிவித்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியுடன் டெஸ்ட் தொடரை தொடங்குவது இதுவே முதன்முறை. 

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தும் வார்னரும் இல்லாததால் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது. நட்சத்திர வீரர்களான அவர்கள் இருவரும் இல்லாவிட்டாலும் கூட அந்த அணி வலிமையான அனுபவம் வாய்ந்த இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. அதுவும் அந்த அணியின் பின்வரிசை வீரர்கள் அருமையாக பேட்டிங் ஆடினர். இரு அணிகளுக்கு இடையே வெறும் 31 ரன்கள் தான் வித்தியாசம். அதனால் இந்தியாவின் வெற்றியை பெரிதாக கொண்டாட தேவையில்லை. 

இந்திய அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிப்பதால், பெர்த்தில் நடக்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு ரொம்ப முக்கியம். 

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப்பிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் மார்க்ஸ் ஸ்டோய்னிஸை அணியில் எடுக்க வேண்டும் என முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். 

ஆனால், இரண்டாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் எந்தவித மாற்றமும் செய்ய தேவையில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு ஆஸ்திரேலிய அணியின் தேர்வு குறித்து வார்னேவும் பாண்டிங்கும் முற்றிலும் முரணான கருத்தை தெரிவித்துள்ளனர். இரண்டில் எது நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இருவரில் யார் ஆடினாலும் எங்களுக்கு கவலையில்லை என்கிற ரீதியில் இந்திய அணி வெற்றி களிப்பில் உள்ளது.