Playoff qualification Second place on the list -
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 55-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தி புணே அணி 18 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதோடு, புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தையும் பிடித்து கெத்து காட்டியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 55-ஆவது லீக் ஆட்டம் புணேவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற புணே கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணி, ஆட்டத்தின் முதல் பந்திலேயே உனட்கட் பந்துவீச்சில் கப்டிலின் விக்கெட்டை பறிகொடுத்தது.
பின்னர் ரித்திமான் சாஹாவுடன் இணைந்தார் ஷான் மார்ஷ். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. ஷான் மார்ஷ் 10 ஓட்டங்களில் வெளியேற, இயான் மோர்கன், ராகுல் திவாதியா ஆகியோர் தலா 4 ஓட்டங்களிலும், கேப்டன் மேக்ஸ்வெல் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர்.
இதனால் 5.5 ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை மலமலவென இழந்து தடுமாறியது பஞ்சாப். பின்னர் சாஹாவுடன் இணைந்தார் அக்ஷர் படேல். இந்த ஜோடி 19 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.
சாஹா 13 ஓட்டங்களில் வெளியேற, அக்ஷர் படேல் 20 பந்துகளில் 22 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்தவர்களில் ஸ்வப்னில் சிங் 10 ஓட்டங்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, 15.5 ஓவர்களில் 73 ஓட்டங்கள் சுருண்டது பஞ்சாப்.
புணே தரப்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளையும், ஜெயதேவ் உனட்கட் 2 விக்கெட்டுகளையும், டேனியல் கிறிஸ்டியான் 2 விக்கெட்டுகளையும், ஆடம் ஸம்பா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய புணே அணியில் ராகுல் திரிபாதி - அஜிங்க்ய ரஹானே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவர்களில் 41 ஓட்டங்கள் சேர்த்தது. திரிபாதி 20 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ரஹானேவுடன் இணைந்தார் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். இந்த ஜோடி சிறப்பாக ஆட, புணேவின் வெற்றி எளிதானது. மேக்ஸ்வெல் வீசிய 12-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸரை விளாசி ஆட்டத்தை முடித்தார் ரஹானே.
இதனால் புணே அணி 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.
ரஹானே 34 ஓட்டங்களுடனும், ஸ்மித் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் தரப்பில் அக்ஷர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
ஜெயதேவ் உனட்கட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தையும் பெற்றது புணே அணி…
