ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடி வீரர்களின் கூடாரமாகியுள்ளது. விராட் கோலியின் தலைமையிலான பெங்களூரு அணி அடுத்த சீசனை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ஆனால் இதில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்று. விராட் கோலி, டிவில்லியர்ஸ் என்ற இரண்டு ஜாம்பவான்களை பெற்றிருந்தும் அந்த அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. 

கடந்த சீசனில் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கியது பெங்களூரு அணி. ஆனால் கடந்த முறையும் அது நிறைவேறவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் 12வது சீசனை வென்றே தீரவேண்டும் என்ற உறுதியில் உள்ள பெங்களூரு அணி.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஏலத்தில் சில அதிரடி வீரர்களை எடுத்துள்ளது ஆர்சிபி அணி. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஹெட்மயரை ரூ.4.2 கோடிக்கு எடுத்துள்ளது. இவர் இந்திய அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி மிரட்டினார். குறிப்பாக ஸ்பின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். 

தொடக்க வீரராக கோலி களமிறங்கிவிட்டு மூன்றாம் வரிசையில் ஹெட்மயரையும் நான்காம் இடத்தில் டிவில்லியர்ஸையும் அந்த அணி களமிறக்கக்கூடும். இவர் மட்டுமல்லாமல் மும்பையை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் ஷிவம் துபேயை ரூ.5 கோடிக்கு வாங்கியுள்ளது பெங்களூரு அணி. 

மேலும் தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் கிளாசனையும் பெங்களூரு அணி எடுத்துள்ளது. இவரை மிடில் ஆர்டரில் பயன்படுத்திக்கொள்ளும்.

இவர்கள் தவிர குர்கிரீத் சிங் மன், தேவ்தத் பாடிக்கல், ஹிம்மத் சிங், மிலிந்த் குமார், பிரயாஸ் பர்மான், அக்‌ஷ்தீப் நாத் ஆகிய வீரர்களையும் பெங்களூரு அணி எடுத்துள்ளது. 

பெங்களூரு அணியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ், பார்த்திவ் படேல், மயன்க் அகர்வால், கருண் நாயர் என ஒரு பேட்டிங் படையே ஏற்கனவே இருக்கும் நிலையில், ஹெட்மயர், கிளாசன், ஷிவம் துபே என மேலும் சில அதிரடி வீரர்கள் இணைகின்றனர்.