சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் உலகின் 70-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்ஸியா லோபஸை வீழ்த்தினார் 101-ஆம் நிலை வீரரான பிரிட்டனின் அல்ஜாஸ் பெடேன் 13-வது முறையாக வெற்றிப் பெற்றார்.

22-ஆவது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பிரதான கோர்ட்டில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் பிரிட்டனின் அல்ஜாஸ் பெடேன் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கார்ஸியா லோபஸை தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 4-ஆவது கேமில் 40-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் லோபஸ். இதனால் அவர் பெடேனின் சர்வீஸை எளிதாக முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆக்ரோஷமாக ஆடிய பெடேன் 3 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டதோடு, தனது சர்வீஸையும் காப்பாற்றினார். இந்த கேம், பெடேனுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இதன்பிறகு அசத்தலாக ஆடிய பெடேன், 7 மற்றும் 9-ஆவது கேம்களில் லோபஸின் சர்வீஸை முறியடித்தார். இதனால் முதல் செட்டை 37 நிமிடங்களில் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் பெடேன்.

முதல் செட்டை கைப்பற்றியதால் 2-ஆவது செட்டை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொண்டார் பெடேன். இதனால் 4-ஆவது கேமில் லோபஸின் சர்வீஸை முறியடித்தார்.

இந்த முறை தனது சர்வீஸை காப்பாற்ற லோபஸ் கடுமையாகப் போராடியபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை.

லோபஸுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்த பெடேன், 7-ஆவது கேமில் அவரை நிலைகுலைய வைத்தார். 9-ஆவது கேமில் லோபஸ் ஆக்ரோஷமாக ஆட, அந்த கேம் டியூஸ் வரை சென்றது. ஆனால் விடாப்பிடியாக போராடிய பெடேன், கேமை தன்வசமாக்கினார். இதனால் 2-ஆவது செட்டும் 6-3 என்ற கணக்கில் அவர் வசமானது.

இதுவரை லோபஸுடன் 3 முறை மோதியுள்ள பெடேன், அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். சென்னை ஓபனில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெடேனுக்கு இது 13-ஆவது வெற்றியாகும்.