perera review issue in kolkatta test match

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், எல்பிடபிள்யூ தீர்ப்பை சரியா என ரிவியூ செய்ய ஓய்வறை உதவியை நாடியது பெரிய பிரச்னையாக உருவெடுத்தது.

இன்றுவரை அந்த பிரச்னை கிரிக்கெட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டுவரும் நிலையில், கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று இலங்கை வீரர் திலுருவன் பெரேரா இன்னும் நேரடியாகவே ரிவியூ கேட்கும் யோசனையை ஓய்வறையிலிருந்து பெற்றது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இன்னிங்சின் 57-வது ஓவரில் மொகமது ஷமியின் பந்தை, பெரேரா கால்காப்பில் வாங்க நடுவர் நீஜல் லாங் அவுட் தெரிவித்தார். நடுவர் அவுட் தெரிவித்த மாத்திரத்திலேயே, பெரேரா பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்.

திடீரென திரும்பி ரிவியூ தேவை என்றார். ரீப்ளேயில் பந்து பெரேராவின் பேடைத் தாக்கிய போது ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பந்து இருந்ததால் விதிப்படி நாட் அவுட். அதனால் நடுவர் நீஜல் லாங் தனது தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டியதாயிற்று.

அவுட் தீர்ப்பளித்து பெவிலியனுக்காகத் திரும்பிய பிறகு திடீரென ரிவியூ கேட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. பெவிலியனில் இருந்து ஆலோசனை வந்ததன் அடிப்படையில், பெரேரா ரிவியூ கேட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராகவும் குசல் மெண்டிஸ் பெவிலியன் நோக்கி நடைபோட தொடங்கி உடனேயே ரிவியூ கேட்டார்.

பெங்களூருவில் ஸ்மித் இப்படி செய்த போது நடுவர் அவரை ரிவியூ செய்ய அனுமதிக்கவில்லை. இன்று பெரேரா செய்தது மிக நேரடியான விஷயம். ஆனால் பெரேரா தப்பிவிட்டார்.

ரிவியூவைப் பொறுத்தவரை, கேப்டன் தனது பவுலர், பீல்டர் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கலாம். அதேநேரத்தில் களத்தில் இருக்கும் பேட்ஸ்மென்கள் தங்களிடையே ஆலோசனை நடத்திக் கொள்ளலாம். எந்தச் சூழலிலும் களநடுவரிடம் அவரது தீர்ப்பு பற்றி எத்தரப்பினரும் கேட்கக் கூடாது. எனவே இது தவிர வேறு வெளி ஆலோசனை மூலமும் ரிவியூ கேட்கக்கூடாது.

இந்நிலையில், பெரேரா செய்தது சரியா? அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.