புரோ கபடி சீசன் – 5 போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - யு.பி.யோதா அணிகள் இடையிலான ஆட்டம் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

புரோ கபடி சீசன் – 5 போட்டி அகமதாபாதில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - யு.பி.யோதா அணிகளும் அபாரமாக ஆடின.

இருப்பினும் யு.பி.யோதா அணி மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையிலேயே இருந்தது.

முதல் பாதி ஆட்டநேர முடிவில் 13-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் யு.பி.யோதா அணி 22-17 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பிறகு பாட்னா வீரர்களின் டேக்கிள்கள் மோசமாக அமைந்ததால், அந்த அணி 17-25 என்ற கணக்கில் பின் தங்கியது. எனினும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரைடர் பிரதீப் நர்வால், ஒரே நிமிடத்தில் மூன்று புள்ளிகளைப் பெற, பாட்னா சரிவிலிருந்து மீண்டது.

கடைசி நிமிடத்தில் இரு புள்ளிகள் பின் தங்கியிருந்தது பாட்னா. கடைசி 10 விநாடிகளில் நர்வால் தனது ரைடின் மூலம் ஒரு புள்ளியைப் பெற, கூடுதலாக டெக்னிக்கல் புள்ளியும் கிடைத்தது. இதனால் ஆட்டம் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

இன்று எந்த ஆட்டமும் கிடையாது. நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - புணேரி பால்டான் அணிகளும், 2-வது ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகளும் மோதும்.