ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாய் மைதானத்தில் நடக்கிறது. 

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் ஆடிவருகின்றன. 

சூப்பர் 4 சுற்றில் இந்தியா - வங்கதேசம் இடையே நடந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. 

சூப்பர் 4 சுற்றில் இன்று இரண்டு போட்டிகள் நடந்துவருகின்றன. ஒரு போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் மோதின. அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தும் முனைப்பில் இந்திய அணியும் இந்தியாவிடம் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் களமிறங்கியுள்ளன. 

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ளார். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு எதிராகவும் அரைசதம் அடித்துள்ளார். அதிலும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஆடிய ஷாட்கள் அந்த அணியை அச்சுறுத்தும் விதமாக அமைந்தன. ரோஹித் சர்மா ஒரு பெரிய ஹிட்டர். களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் ரோஹித்தை அவுட்டாக்குவது மிக மிக கடினம். அதுவும் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடினால், ரோஹித் இருக்கும் ஃபார்மிற்கு அவரை அவுட்டாக்க முடியாவிட்டால், இந்திய அணியின் ஸ்கோர் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எகிறிவிடும். 

ரோஹித் மட்டுமல்லாமல் தவானும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இந்திய அணியை முதலில் பேட்டிங் ஆடவிட்டால் அது ஆபத்தாக அமையும் என்று அறிந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

மேலும் இந்திய அணியில் இலக்கை விரட்டுவதில் வல்லவரான கோலி இல்லாததையும் ஒரு காரணியாக பாகிஸ்தான் கருதியிருக்கக்கூடும்.