நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்றதன் மூலம் தொடர்ந்து 11 டி20 தொடர்களை வென்று அசத்தியுள்ளது. 

ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, தொடர்ந்து டி20 போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அண்மையில் நடந்த தொடரில் அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து பாகிஸ்தான் அணி தொடரை வென்றது. 

இதையடுத்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது பாகிஸ்தான் அணி. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் கடைசி ஓவரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

2வது டி20 போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் இந்த முறையும் தொடக்க வீரர் கோலின் முன்ரோ தான் நன்றாக ஆடினார். முன்ரோவும் கோரி ஆண்டர்சனும் தலா 44 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 37 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர் முடிவில் 153 ரன்கள் எடுத்தது. 

154 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹஃபீஸ், ஆசிஃப் அலி ஆகிய நான்கு பேரும் சம அளவிலான பங்களிப்பை அளித்ததால் அந்த அணி 19.4 ஓவரில் பெரிய சிரமம் இன்றி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என வென்றது. மூன்றாவது போட்டி எஞ்சியுள்ளது. இந்த தொடரை வென்றதன்மூலம் தொடர்ந்து 11 டி20 தொடர்களை வென்று பாகிஸ்தான் அணி அசத்தியுள்ளது.