நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை வென்ற பாகிஸ்தான் அணி, தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. இதில் முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியில் பெரிதாக யாரும் அடித்து ஆடாத நிலையில், முகமது ஹஃபீஸ், சர்ஃப்ராஸ் மற்றும் ஆசிஃப் ஆலியின் பங்களிப்பால் 20 ஓவர் முடிவில் 148 ரன்களை எடுத்தது. 

149 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கோலின் முன்ரோ மட்டுமே 58 ரன்கள் எடுத்தார். பிலிப்ஸ், வில்லியம்ஸான், கோலின் டி கிராண்ட்ஹோம், கோரி ஆண்டர்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் ரோஸ் டெய்லர் மட்டும் அடித்து ஆடினார். கடைசி இரண்டு ஓவர்களில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 

அதனால் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ஷாஹீன் அஃப்ரிடி வீசினார். கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் கடைசி இரண்டு பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது 2 ரன்கள் அடித்தார் டெய்லர். இனிமேல் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் கூட போட்டி டிராதான் ஆகும் என்ற நிலையில், டெய்லர் பவுண்டரிதான் அடித்தார். இதையடுத்து கடைசி பந்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. 

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது.