இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளைப் போன்று பாகிஸ்தானும் சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை நடத்திவருகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் மூன்றாவது சீசன் துபாயில் நடந்துவருகிறது. இந்த சீசனில் கராச்சி, லாகூர், பெஷாவர், குவெட்டா, இஸ்லமபாத் முல்தான் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில், இஸ்லமாபாத் மற்றும் குவெட்டா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, சில ரசிகர்கள் இந்திய கேப்டன் விராட் கோலி பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடுவதை நாங்கள் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். பாகிஸ்தான் ரசிகர்கள் தங்களது விருப்பத்தை ஒரு அட்டையில் எழுதி காட்டினர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

தொடர்ச்சியான சதங்கள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றால், சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்களைப் பெற்றுள்ள கோலிக்கு பாகிஸ்தான் மட்டும் விதிவிலக்கா என்ன? பாகிஸ்தானிலும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள கோலி, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதில் கோலியின் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.