ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி பரிதாபமாக ரன் அவுட்டானார். கிரிக்கெட் வரலாற்றின் அரிதான விக்கெட்டுகளில் இதுவும் ஒன்று.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டி அபுதாபியில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 137 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 400 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதனால் ஆஸ்திரேலிய அணியை விட 537 ரன்கள் முன்னிலை பெற்றது. 538 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக ஆடிவந்த அசார் அலி 64 ரன்களுக்கு பரிதாபமாக ரன் அவுட்டானார். சிடில் வீசிய 53வது ஓவரின் 2வது பந்தை தேர்டு மேன் திசையில் அடித்துவிட்டு ஓடினார் அசார் அலி. பந்து வேகமாக பவுண்டரியை நோக்கி ஓடியது; அந்த பந்தை ஃபீல்டரால் பிடிக்க முடியாது என்று தெரிந்ததும், பந்து பவுண்டரிக்கு ஓடிவிட்டது என நினைத்து, ரன் ஓடுவதை பாதியில் நிறுத்திவிட்டு நடு பிட்ச்சில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். 

ஆனால் பந்து பவுண்டரி லைனை தொடவில்லை. பவுண்டரி கோட்டிற்கு முன்னதாக நின்றுவிட்டது. அதனால் வேகமாக பந்தை எடுத்து விக்கெட் கீப்பரிடம் ஸ்டார்க் வீசினார். கீப்பர் டிம் பெய்ன் ரன் அவுட் செய்தார்; ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டை கொண்டாடினர். எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்த அசார் அலிக்கு அம்பயர் விளக்கினார். இதையடுத்து விரக்தியில் தலையில் அடித்துக்கொண்டு வெளியேறினார் அசார் அலி.