இந்திய அணியை கிண்டல் செய்ய நினைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அசிங்கப்பட்டுள்ளது. 

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது.  இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

லீக் சுற்றில் முதல் போட்டியில் ஹாங்காங் அணியை போராடி வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பரஸ்பரம் போட்டித்தொடரில் ஆடாததால், சர்வதேச தொடரில் மட்டுமே மோதிக்கொள்கின்றன. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது இந்திய அணி. 

அதனால் ஆசிய கோப்பை தொடரில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தானை 162 ரன்களில் சுருட்டி, 163 ரன்கள் என்ற இலக்கை 29 ஓவரிலேயே எட்டி, கடந்த ஆண்டு தோற்றதற்கு பழி தீர்த்துக்கொண்டது இந்திய அணி. 

இந்த போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியின் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து,  கடந்த ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் செய்ததை போன்ற ஒரு சம்பவத்தை பாகிஸ்தான் செய்யுமா? என்று இந்திய அணியை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டிருந்தது. 

அந்த பதிவில் "happened" என்ற வார்த்தையை எழுத்து பிழையுடன் பதிவிட்டிருந்தது. இதைக்கண்ட இந்திய ரசிகர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கழுவி ஊற்றி வருகின்றனர். 

இந்திய அணியை கிண்டல் செய்வதாக நினைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயங்கரமாக வாங்கி கட்டி கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி அபார வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூக்கை உடைத்துள்ளது.