Pakistan Cricket Board asks BCCI Rs 451 crore compensation

இருதரப்பு கிரிக்கெட் தொடர்பான ஒப்பந்தத்தை மதித்து நடக்கவில்லை எனக் கூறி பிசிசிஐயிடம் ரூ.451 கோடி இழப்பீடு கேட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி). அதற்கான சட்ட நடைமுறைகளையும் தொடங்கியதன் தொடர்ச்சியாக தற்போது ஐசிசிக்கு இந்த விவகாரம் தொடர்பாகநோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து பிசிபி அதிகாரி கூறியது:

"இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, 2014-15 காலகட்டத்தில் இரண்டு நாடுகளும் இரண்டு கிரிக்கெட் தொடர்களை விளையாடியிருக்க வேண்டும். ஆனால், பிசிசிஐ அதற்கு ஒத்துழைக்கத் தவறியதால் அந்தத் தொடர்கள் நடைபெறவில்லை.

இதனால் பிசிபிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் பிசிசிஐயிடம் இழப்பீடு கோரும் நடவடிக்கைகளை கடந்த மே மாதம் தொடங்கினோம். அது தொடர்பாக பிசிபி அனுப்பிய நோட்டீஸுக்கு பிசிசிஐ பதிலளிக்கவில்லை.

எனவே, இதுகுறித்து ஐசிசியின் குறைதீர் குழு விசாரிக்க வேண்டும் எனக் கோரி அந்த அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். பிசிசிஐயிடம் ரூ.451 கோடி இழப்பீடாக கோரியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தானின் நோட்டீஸ் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது குறைதீர் குழுவின் தலைவருக்கு அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் என்றும் ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.