எங்கள் அணியை இளம் வீரர் வழிநடத்த வேண்டும் என்று புணே சூப்பர் ஜயண்ட்ஸ் கேப்டனாக இருந்த தோனி நீக்கப்பட்டதை குறித்து புணே அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயங்கா தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் ரைஸிங் புணே சூப்பர் ஜயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஸ்டீவன் ஸ்மித் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக புணே அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயங்கா கூறியதாவது:
“கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகவில்லை. வரும் சீசனில் எங்கள் அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித்தை நியமித்துள்ளோம்.
வெளிப்படையாக சொன்னால், கடந்த சீசனில் எங்கள் அணி சிறப்பாக செயல்படவில்லை. அதனால் 10-ஆவது சீசனுக்கு எங்கள் அணியை இளம் வீரர் ஒருவர் வழி நடத்த வேண்டும் என்று விரும்பினோம்.
தலைசிறந்த கேப்டன் மற்றும் தலைசிறந்த மனிதரான தோனி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர், எங்கள் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார். அணியின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவுகளுக்கு தோனியும் ஆதரவாக இருக்கிறார்” என்றுத் தெரிவித்தார்.
