Our first goal is to launch the series against Sri Lanka - Ridimhan Saha faith ...

இலங்கைக்கு எதிரான தொடரை வெற்றியுடன் தொடங்குவதே எங்களது முதல் இலக்கு என்று, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா நம்பிக்கையுடன் கூறினார்.

இலங்கை அணி தலா மூன்றுப் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக கொல்கத்தா வந்துள்ள இந்திய அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா கூறியது:

"இலங்கைக்கு எதிரான தொடரை வெற்றியுடன் தொடங்குவதே எங்களது முதல் இலக்காகும். அந்த உந்துதலின் மூலம் தொடரையும் கைப்பற்ற முனைவோம். ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும். ஒவ்வொன்றிலுமான சவால் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

எனவே, எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டால், எதிர்வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை நம்பிக்கையுடன் அணுக இயலும்.

அணியின் பந்துவீச்சாளர்களில் அஸ்வினை பொருத்த வரையில், மற்றவர்களைக் காட்டிலும் பந்துவீச்சில் அதிக வித்தியாசங்களைக் காட்டுபவர். ஆகவே, அவர் மிகுந்த சவால் அளிப்பவராக இருக்கிறார்.

வேகப்பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, முகமது சமி ஆகியோரது பந்துவீச்சை ஒரு விக்கெட் கீப்பராக நானும் கவனமுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பேட்டிங்கைப் பொருத்த வரையில், பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்து விடுபடும் தருணத்தை கணித்தாலேயே 50 சதவீத பணி முடிந்துவிடும். அதையடுத்து அந்தப் பந்து எவ்வாறு பவுன்ஸ் ஆகிறது? கட் ஆகிறது? என்பதை அறிந்து அதை எதிர்கொள்ள வேண்டும்.

ஃபீல்டிங்கில் களத்தில் எந்தவொரு தருணத்தில் எவரும் பரிந்துரைகளை வழங்கலாம் என அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், இறுதி முடிவானது கேப்டனுடையதாகவே இருக்கும். பரிந்துரைகளை வழங்கும்போது அதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.