ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய பூர்வகுடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. 

வான வேடிக்கை, பல்வேறு மெய்சிலிர்க்க வைக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிகள் தொடங்கியபோதும், பூர்வ குடிகளின் எதிர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியா கண்டம் பிரிட்டிஷ் முடியாட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அங்கு வசித்து வந்த பூர்வகுடிகளை துன்புறுத்தி, தங்கள் நாட்டு குடிமக்களை பிரிட்டிஷ் அரசு அங்கு குடியமர்த்தியது. இதனால் பூர்வகுடிகளின் உரிமைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறிவிட்டனர். 

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பூர்வகுடிகள் போராட்டம் நடத்தினர். 

நகரின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்ட பிரிட்டிஷ் ராணியின் கோலை பூர்வகுடியினர் மறித்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நடத்தினர். 

பிரிட்டிஷ் முடியாட்சியில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை எதிராக போராட்டம் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.