Asianet News TamilAsianet News Tamil

ஒரே ஒரு முச்சதம்; பல்வேறு சாதனைகள்…

one ever-triple-century-various-achievements
Author
First Published Dec 20, 2016, 11:45 AM IST


சேவாக்கிற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து முச்சதம் அடித்த இந்திய வீரர், டெஸ்ட் போட்டியில் கீழ்வரிசையில் களமிறங்கி அதிக ஓட்டங்களைக் குவித்தவர், முதல் சதத்டை முச்சதமாக மாற்றியவர், ஒரே நாளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர், குறைந்த இன்னிங்சில் முச்சதம் அடித்தவர், இளம் வயதில் முச்சதம் அடித்தவர் என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் கருண் நாயர்.

இந்தியாவிலிருந்து கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி, விவிஎஸ் இலட்சுமண் என எத்தனையோ ஜாம்பவான்கள் சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்திருந்தாலும், அவர்களுக்கு முச்சதம் என்பது கனவாகவே அமைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சார்பில் யாருமே முச்சதம் அடித்ததில்லை என்ற நீண்ட நாள் குறை அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் மூலம் 2004-ஆம் ஆண்டு தீர்ந்தது. அவர் ஒன்றல்ல, இரண்டு முறை முச்சதங்களை விளாசிய பெருமைக்குரியவர்.

முதல் முச்சதத்தை 2004-இல் முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக விளாசிய சேவாக், அடுத்த முச்சதத்தை 2008-இல் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளாசினார்.

அதன்பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்கள் யாரும் முச்சதம் அடிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 303 ஓட்டங்களை விளாசியதன் மூலம் முச்சதம் அடித்த 2-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

306 பந்துகளில் இரட்டைச் சதம் கண்ட கருண் நாயர், அதன்பிறகு டி20 போட்டியில் விளையாடுவதைப் போன்று ஆட ஆரம்பித்தார். இதனால் அவர் அடுத்த 75 பந்துகளிலேயே சதமடித்து அசத்தினார். அவருடைய ஆட்டம், 2008-இல் சென்னையில் சேவாக் முச்சதம் அடிக்கும்போது ஆடிய ஆட்டத்தை நினைவுகூர்வதாக அமைந்தது.

முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய 3-ஆவது வீரர் கருண் நாயர் ஆவார். கேரி சோபர்ஸ், பாப் சிம்ஸன் ஆகியோர் மற்ற இருவர். 1957-58-இல் கிங்ஸ்டனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேரி சோபர்ஸ் 365 ஓட்டங்களும், 1964-இல் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பாப் சிம்ப்ஸன் 311 ஓட்டங்களும் குவித்தனர்.

டெஸ்ட் போட்டியில் 5 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் கருண் நாயர். 2012-இல் சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மைக்கேல் கிளார்க் ஆட்டமிழக்காமல் 329 ஓட்டங்கள் குவித்ததே 5 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கிய ஒருவர் குவித்த அதிக ரன் சாதனையாக இன்றளவும் உள்ளது. கிளார்க்கிற்கு அடுத்தபடியாக 1934-இல் லீட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் பிராட்மேன் 304 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

சென்னை டெஸ்டின் 4-ஆவது நாளில் மட்டும் கருண் நாயர் 232 ஓட்டங்கள் குவித்துள்ளார். இது இந்தியர் ஒருவரால் ஒரே நாளில் எடுக்கப்பட்ட 3-ஆவது அதிகபட்ச ரன்னாகும். முதல் இரு அதிகபட்ச ரன் சாதனை சேவாக் வசம் உள்ளது. அவர் 2009-இல் மும்பையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 284 ஓட்டங்களும், 2008-இல் சென்னையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 257 ஓட்டங்களும் குவித்துள்ளார். சர்வதேச அளவில் டெஸ்டில் ஒரே நாளில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் நாயர் 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கருண் நாயர் தனது 3-ஆவது இன்னிங்ஸில் முச்சதம் அடித்ததன் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் முச்சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக லென் ஹட்டன் தனது 9-ஆவது இன்னிங்ஸில் முச்சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. இப்போது அவர் 2-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஹட்டனுக்கு அடுத்தபடியாக டான் பிராட்மேன், ஜான் எட்ரிச் ஆகியோர் தங்களுடைய 13-ஆவது இன்னிங்ஸில் முச்சதம் அடித்துள்ளனர்.

கருண் நாயர் 25 வயதில் முச்சதம் அடித்துள்ளார். இதன்மூலம் இளம் வயதில் முச்சதம் அடித்தவர்கள் வரிசையில் கருண் நாயருக்கு 6-ஆவது இடம் கிடைத்துள்ளது. இதில் சோபர்ஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் முச்சதம் அடித்தபோது 21 வயது 213 நாள்களை எட்டியிருந்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios