இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை தோற்கடித்தது.
கோவாவின் ஃபட்ரோடா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 50-ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி கோல் அடித்தது. 18 யார்ட் பாக்ஸில் இருந்து சேத்தியாசென் உதைத்த பந்து கோவா வீரர் மீது பட்டு கோலானாது.
இதையடுத்து அபாரமாக ஆடிய கோவா 62-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை பெர்னாண்டஸ் கொடுத்த கிராஸில் ராபின் சிங் அடித்தார். 72-ஆவது நிமிடத்தில் கோவா வீரர் சகில் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
எனினும் விடாப்பிடியாகப் போராடிய கோவா அணி 90-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. இந்த கோலை பெர்னாண்டஸ் அடித்தார். இதன்மூலம் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. கோவா அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றபோதிலும், புள்ளிகள் பட்டியலில் எந்த முன்னேற்றமும் இல்லை. 10 புள்ளிகளுடன் கடைசி இடத்திலேயே உள்ளது.
