இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவா அணியைத் தோற்கடித்தது.
ஆல்ஃபாரோ அசத்தலாக இரு கோலடிக்க, கோல்கீப்பர் சுப்ரதா பால் கோவா அணியின் கோல் வாய்ப்புகளை முறியடிக்க, இந்த சீசனில் 2-ஆவது வெற்றியைப் பெற்றது நார்த் ஈஸ்ட்.
குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 20-ஆவது நிமிடத்தில் கோவா வீரர் லூசியா கோல் கீப்பர் கட்டிமானிக்கு "பேக் பாஸ்' கொடுத்தார். அப்போது கட்டிமானி உடனடியாக பந்தை அப்புறப்படுத்தாமல், நிதானம் கட்டினார்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஆல்ஃபாரோ வேகமாக கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினார். அப்போது கட்டிமானி பந்தை "கிளியர்' செய்ய முயன்றார். ஆனால், பந்து அவரிடம் இருந்து நழுவியது. அதைப் பயன்படுத்திக் கொண்ட ஆல்ஃபாரோ மார்பால் முட்டி கோலடிக்க, நார்த் ஈஸ்ட் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய கோவா அணிக்கு 57-ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரு கோல் வாய்ப்புகள் கிடைத்தன. "ஓபன் நெட்டில்' கிடைத்த வாய்ப்பில் டிரினிடேட் கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். ஆனால் பந்து நார்த் ஈஸ்ட் கோல் கீப்பர் சுப்ரதா பால் கையில் பட்டு திரும்ப, அதை ரொமேரியா கோலாக்க முயன்றார். ஆனால், அதையும் சுப்ரதா பால் முறியடித்துவிட்டார்.
இதன்பிறகு 62-ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி 2-ஆவது கோலை அடித்தது. இந்த கோலையும் ஆல்ஃபாரோவே அடித்தார். இதன்பிறகு நார்த் ஈஸ்ட் அணி தாக்குதல் ஆட்டத்தில் இறங்க, கோவாவுக்கு ஆறுதல் கோல்கூட கிடைக்கவில்லை. இறுதியில் நார்த் ஈஸ்ட் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
