நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதையடுத்து இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது வங்கதேசம் அணி.

நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. 

அடுத்து ஆடிய வங்கதேசம் 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் ஃபீல்டிங் செய்யத் தீர்மானித்தது. பேட் செய்த இலங்கை அணியில் விக்கெட்டுகள் விரைவாக விழுந்தன. 

தொடக்க வீரர் குணதிலகா 4 ரன்களில் வெளியேற, உடன் வந்த குசல் மென்டிஸ் 11 ஓட்டங்களுக்கு நடையக் கட்டினார். அடுத்து வந்த குசல் பெரேரா விக்கெட் சரிவைத் தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 61 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் உபுல் தரங்கா 5 ஓட்டங்கள், ஜீவன் மென்டிஸ் 3 ஓட்டங்களில் நடையைக் கட்ட, டாசன் ஷனகா டக் அவுட்டானார். 

பின்னர் வந்த கேப்டன் திசர பெரேரா சற்று நிலைத்து 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 58 ஓட்டங்கள் அடித்தார். கடைசியாக இசுரு உதனா 7 ஓட்டங்கள், அகிலா தனஞ்ஜெயா ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேச தரப்பில் முஸ்டாஃபிஸூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், ஷாகிப் அல் ஹசன், ருபெல் ஹுசைன், மெஹதி ஹசன், செளம்யா சர்க்கார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். 

இதனையடுத்து பேட் செய்த வங்கதேச அணியில் தொடக்க வீரர் தமிம் இக்பால் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 50 ஓட்டங்கள் எடுக்க, உடன் வந்த லிட்டன் தாஸ் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். 

பின்னர் வந்த சபிர் ரஹ்மான் 13 ஓட்டங்கள், முஷ்ஃபிகர் ரஹிம் 28 ஓட்டங்கள், செளம்யா சர்க்கார் 10 ஓட்டங்கள், கேப்டன் ஷாகிப் 7 ஓட்டங்கள் சேர்த்தனர். 

மெஹதி ஹசன், முஸ்டாஃபிஸூர் ரஹ்மான் டக் அவுட்டாக, மஹ்முதுல்லா 43 ஓட்டங்களுடனும், ருபெல் ஹுசைன் ஓட்டங்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினர்.

இலங்கை தரப்பில் அகிலா தனஞ்ஜெயா 2, அபோன்சோ, குணதிலகா, ஜீவன் மென்டிஸ், இசுரு உதனா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். 

மஹ்முதுல்லா ஆட்டநாயகன் ஆனார்.

இதில், வென்றதையடுத்து இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது வங்கதேசம் அணி.