ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி10 லீக் தொடரில் போட்டிக்கு போட்டி அடி வெளுத்து வாங்கிவருகிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரான்.

டி20 லீக் தொடர்களை போலவே டி10 லீக் தொடரும் நடத்தப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு டி10 லீக் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டுவருகிறது. இந்த தொடரில் உலகின் பல முன்னணி வீரர்களும் முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர். 

கடந்த 21ம் தேதி தொடங்கிய இந்த தொடர் டிசம்பர் 2ம் தேதி வரை நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளில் நார்தர்ன் வாரியர்ஸ் அணி அடி வெளுத்து வாங்கி வெற்றிகளை குவித்துவருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் நிகோலஸ் பூரான், ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக ஆடி மிரட்டிவருகிறார். 

பஞ்சாப் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார் பூரான். இவருடன் சேர்த்து ஆண்ட்ரே ரசலின் அதிரடியால் நார்தர்ன் வாரியர்ஸ் அணி பஞ்சாப் லெஜண்ட்ஸுக்கு எதிராக 10 ஓவர்களில் 183 ரன்களை குவித்து 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. 

இந்நிலையில், மராத்தா அரேபியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியிலும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நார்தர்ன் வாரியர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியிலும் பூரான் அடி வெளுத்துள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மராத்தா அரேபியன்ஸ் அணி 9 ஓவர் முடிவில் 94 ரன்களை குவித்தது. மழையால் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

இதையடுத்து 9 ஓவர்களில் 95 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நார்தர்ன் வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர் நிகோலஸ் பூரான், 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 62 ரன்களை குவித்து அந்த அணியின் வெற்றியை எளிதாக்கினார். இதையடுத்து 7.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நார்தர்ன் வாரியர்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்தது.