next ipl season may conduct in uae

அடுத்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரின் 10 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 11வது சீசன் நடந்துவருகிறது.

ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்கி மே மாதம் 19ம் தேதி நிறைவடைகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், பாதுகாப்பு கருதி ஐபிஎல் இடம் மாற்றப்பட உள்ளது. ஏற்கனவே 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் மக்களவை தேர்தலின்போது ஐபிஎல் போட்டிகள் இடம் மாற்றப்பட்டுள்ளன.

2009ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவிலும் 2014ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றன. இந்நிலையில், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவை விட ஐக்கிய அரபு அமீரகத்தின் நேரம் இந்திய ரசிகர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால், அடுத்த ஆண்டு ஐபிஎல் அங்கு நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்ததால், சென்னையில் நடக்க இருந்த போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதுமே, மக்களவை தேர்தல் காரணமாக வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறது.