New Zealand won the match
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 240 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்ததன் மூலம் 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.
மேற்கிந்தியத் தீவுகள் - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதில், மே.இ.தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.
அதன்படி, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து 102.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்கள் குவித்தது. இதனையடுத்து களம் இறங்கிய மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 221 ஓட்டங்கள்ளில் சுருண்டது.
நியூஸிலாந்து தனது 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 291 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்னர், 444 ஓட்டங்கள் என்ற இலக்கை அடைய தனது 2-வது இன்னிங்ஸில் களம் இறங்கியது மே.இ.தீவுகள். மூன்றாவது நாளான திங்கள்கிழமை ஆட்ட நேர முடிவில், அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 30 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நான்காவது நாளான நேற்று விளையாடிய அந்த அணியின் வீரர்கள், நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆட்டத்தின் முடிவில் 63.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 203 ஓட்டங்களில் மே.இ.தீவுகள் சுருண்டது. இதில், அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 64 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிம் சௌதி 2 விக்கெட்கள், போல்ட் 2 விக்கெட்கள், மிச்சல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரண்டாவது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் தனது 17-வது சதத்தைப் பதிவு செய்த நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இவ்வாறாக 240 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றதன்மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
