New Zealand won the first ever series against England

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிராக டி20 ஆட்டம் நியூஸிலாந்தின் வெல்லிங்டனில் நேற்று நடைப்பெற்றது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது.

முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. அதைத்தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வாகை சூடியது.

இந்த நிலையில், இத்தொடரின் 4-வது ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து. இதையடுத்து, பேட் செய்த நியூஸிலாந்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் 65 ஓட்டங்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 72 ஓட்டங்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட், அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

அந்த அணியில், அதிகபட்சமாக டேவிட் மலான் 59 ஓட்டங்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ஓட்டங்களும் எடுத்தனர். கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லர் வெறும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், மிச்செல் சாண்ட்னர், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டிம்சௌதி 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த தொடரின் 5-வது ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவை மீண்டும் எதிர்கொள்கிறது நியூஸிலாந்து.