இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை அந்த அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றுள்ளது நியூசிலாந்து அணி.

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என நியூசிலாந்து அணி வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை ஏற்கனவே நியூசிலாந்து அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்ததால், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் 2 ரன்னிலும் கோலின் முன்ரோ 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 31 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்கு அந்த அணியின் கேப்டன் வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் இணைந்து அபாரமாக ஆடி, 116 ரன்களை குவித்தனர். 

அரைசதம் அடித்த வில்லியம்சன் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரோஸ் டெய்லருடன் நிகோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை அணியின் பவுலிங்கை அடித்து ஆடி ரன்களை குவித்தது. பொறுப்பாக ஆடி சதமடித்த ரோஸ் டெய்லர் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்கு டெய்லர் - நிகோல்ஸ் ஜோடி 154 ரன்களை குவித்தது. 47வது ஓவரின் 2வது பந்தில் டெய்லர் அவுட்டாகும்போது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 301. அதன்பிறகு நிகோல்ஸின் அதிரடியால் எஞ்சிய 20 பந்துகளில் 63 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி. அபாரமாக ஆடி சதமடித்த நிகோல்ஸ் 124 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

365 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் திசாரா பெரேரா மட்டுமே தனி ஒருவனாக அடித்து ஆடி போராடினார். எஞ்சிய வீரர்கள் யாருமே சோபிக்கவில்லை. அந்த அணி நியூசிலாந்து பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் 42வது ஓவரில் 249 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 3-0 என ஒருநாள் தொடரை வென்றது.