இங்கிலாந்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 427 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 58 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிரெய்க் ஓவர்டன் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

நியூஸிலாந்தில் தரப்பில் போல்ட் 6, செளதி 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

பின்னர் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ûஸ ஆடி வருகையில், மழை காரணமாக 2 மற்றும் 3-ஆம் நாள் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. 3-ஆம் நாளான சனிக்கிழமை முடிவில் 95 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து. 

கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 102 ஓட்டங்கள் சேர்த்தார். 4-ஆம் நாள் ஆட்டத்தை ஹென்றி நிகோலஸ் 52 ஓட்டங்கள், வாட்லிங் 18 ஓட்டங்களுடன் தொடங்கினர். 

இதில் நிகோலஸ் சதம் கடந்து நிலைத்தார். வாட்லிங் 31 ஓட்டங்கள், கிரான்ட்ஹோம் 29 ஓட்டங்கள், டோட் ஆஸ்ட்லே 18 ஓட்டங்கள், டிம் செளதி 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். நிகோலஸ் 18 பவுண்டரிகள் உள்பட 145 ஓட்டங்கள், நீல் வாக்னர் 9 ஓட்டங்கள் எடுத்து ஆடி வந்தபோது நியூஸிலாந்து டிக்ளேர் செய்தது. 

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ், ஸ்டுவர்ட் தலா 3, ஓவர்டன், ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
இதனையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆடி வரும் இங்கிலாந்தில் நேற்றைய முடிவில் மலான் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அலாஸ்டர் குக் 2 ஓட்டங்கள், ஸ்டோன்மேன் 55 ஓட்டங்கள், ஜோ ரூட் 51 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். 

நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 2, வாக்னர் ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 369 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸ் ஆடி வரும் இங்கிலாந்து, நேற்றைய முடிவில் 46.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
 
நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இன்னும் 237 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து விக்கெட்டுகளை முழுவதுமாக இழக்காத பட்சத்தில் போட்டி டிரா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.