நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 

முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை 157 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, இலக்கை எளிதாக எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அந்த போட்டியில் நியூசிலாந்து அணி தனது இன்னிங்ஸை வெறும் 38 ஓவர்களிலேயே முடித்தது. அதற்குள்ளாகவே ஆல் அவுட்டானது. 

மவுண்ட் மாங்கனியில் இன்று நடந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியிடம் படுதோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் - தவான் அமைத்து கொடுத்த வலுவான அடித்தளத்தால் 50 ஓவர் முடிவில் 324 ரன்களை குவித்தது. 325 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 166 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பிறகு பிரேஸ்வெல் தனி ஒருவனாக நின்று இந்திய அணியின் பவுலிங்கை அடித்து ஆடி அரைசதம் கடந்தார். எனினும் அவரும் 57 ரன்களில் ஆட்டமிழக்க, 40.2 ஓவரில் 234 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. சொந்த மண்ணில் மிகவும் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் வழக்கமுடைய நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் 40 ஓவர்களுக்கு உள்ளாகவே ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. முதல் போட்டியில் 38 ஓவரிலும் இரண்டாவது போட்டியில் 40 ஓவரிலும் இன்னிங்ஸை இழந்தது. 50 ஓவர்கள் கூட முழுதும் ஆடாதது பெரிய அதிர்ச்சிதான். ஆனால் இதற்கான கிரெடிட்டுகள் அனைத்தும் இந்திய அணியின் பவுலர்களையே சாரும். குறிப்பாக குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடிக்குத்தான் இந்த கிரெட்டுகளின் பெரும்பகுதி போய் சேரும். இவர்கள் இருவரும் இணைந்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 

முதல் போட்டியில் அடைந்த தோல்வியைக்கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாத நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்த தோல்வியால் விரக்தியடைந்துவிட்டார். போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வில்லியம்சன், வெற்றி தோல்வி பெரிய விஷயமல்ல. ஆனால் நாங்கள் தோற்ற விதம்தான் பிரச்னை. எல்லா கிரெடிட்டும் இந்திய அணிக்குத்தான். இந்த பிட்ச்சில் 325 ரன்கள் அடித்திருக்கக்கூடிய இலக்குதான். கையில் விக்கெட்டுகள் இருந்திருந்தால் இலக்கை எட்டியிருக்கலாம். எனினும் இதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி 324 ரன்களில் இந்திய அணியை கட்டுப்படுத்தினர் என்று வில்லியம்சன் தெரிவித்தார்.